Wednesday, April 28, 2004

கேள்வி-7

தொ(ல்)லைக்காட்சியில் இராமாயணம்/மகாபாரதத் தொடர்கள் பார்த்தபோது எழுந்த கேள்வி.
இராமனுடைய/கண்ணனுடைய/கிருஷ்ணனுடைய எதிரிகளாக வருபவர்கள் அனைவருமே சிவ பக்தர்களாக,திருநீறணிபவர்களாகவும், ஆதரவாளர்கள் அனைவருமே நாமமிடும் வைணவர்களாகவும் இருப்பது எப்படி? இந்தக் கதைகளெல்லாம் சைவத்தை எதிர்ப்பதற்காக வைணவர்கள் கட்டமைத்த ஒருதலைப்பட்சமான புனைவுகள்தான் எனக்கொள்ளலாமா?

Monday, April 26, 2004

கேள்வி-6

NDTV-யில் நேற்று ஒரு நல்ல நிகழ்ச்சி வந்தது. நடுத்தர வர்க்கம்/இளைஞர்கள் அரசியல்/தேர்தலில் இருந்து விலகிப் போகிறார்களா என்ற தலைப்பில். தெற்கு மும்பையில் போட்டியிடும் ஒரு 27 வயது நிரம்பிய பாஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந் து படித்துத் திரும்பிய வேட்பாளர், புனேயில் சுயேச்சையாக நிற்கும் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு பத்திரிக்கையாளர் என மூவரைச் சர்மாரியாகக் கேள்வி கேட்டார் ராஜ்தீப். பார்வையாளர்களாக இருந்தவர்களில் நிறையப் பேர் கல்லூரி மாணவர்/மாணவியர்கள். இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சிகள் படித்தவர்கள் /அறிவாளிகள்/சிந்தனையாளர்கள் அதிகம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஏன் வருவதில்லை?

Saturday, April 24, 2004

கேள்வி-5

ஈழம் பற்றி இங்குமங்கும் இணையத்தில் சிதறிக்கிடக்கும் செய்திகள் பல. 1948 லிருந்து ஈழத்தின்/ஈழப் போராட்டத்தின் வரலாற்றை முறையாக,முழுமையாகத் தொகுத்து வைத்திருக்கும் இணையத்தளம் ஏதேனும் இருக்கிறதா? (நூல்கள் இருந்தாலும் கிடைக்கும் முகவரி அளியுங்கள்)

Monday, April 19, 2004

கேள்வி-4

தமிழக அரசு ஊழியர்கள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் (அரசுக்கு தனது படைப்புகளை அனுப்பி சரிபார்த்தபின்பே வெளியிட வேண்டும், படத்தை censor-க்கு அனுப்புவது போல) இதழ்களில்/செய்தித்தாள்களில் எழுதக்கூடாது என்ற அரசாணையை ஏன் தமிழ்நாட்டில் (செய்தித்தாள்கள் உள்பட) யாரும் எதிர்க்கவில்லை? எழுத்துரிமை மீதான இந்தக் கத்தியை முன்பு இந்திரா காந்தி கொண்டு வந்த போது எதிர்த்த கலைஞர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்று அமைதி காப்பது ஏன்? எழுத்தாளர்களும் ஏன் எதிர்க்கவில்லை?

Friday, April 16, 2004

கேள்வி-3

நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என்றால் என்ன? இந்த பூச்சாண்டிகளால் சாதாரண மக்களுக்கான இலக்கியத்துக்கு என்ன பயன்?

கேள்வி-2

சேவாக் 300 அடித்ததற்குத் தாண்டித் தாண்டிக் குதித்து வலைப் பதிந்த நண்பர்கள் லாரா 400 அடித்ததைப் பற்றி மூச்சு விடாதது ஏன்? இவர்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறார்களா அல்லது இந்தியா விளையாடும் கிரிக்கெட்டை மட்டும் நேசிக்கிறார்களா? (பத்ரி தவிர மற்ற அனைவருக்குமான கேள்வி)

கேள்வி-1

பெண் எழுத்தாளர்கள் நிறையப் பேர் தங்கள் பெயரில் ஆண்களின் பெயரையும் சுமப்பது ஏன்? (திசைகள் மார்ச் பெண்கள் சிறப்பிதழ் படித்து எழுந்த கேள்வி)

Thursday, April 15, 2004

இது கேள்விகளின் பிறப்பிடம்

குழந்தைகளின் இயல்பான பண்பு கேள்வி கேட்பது. அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமையற்ற நாம் அவர்கள் மீது எரிந்து விழுகிறோம். கேள்வி கேட்பதாலேயே ஆசிரியர்களால் வெறுக்கப்பட்டவன் நான். சிலமுறை வகுப்பிற்கு வெளியில் மணலில் (வெய்யிலில்) முட்டி போட்டதும் உண்டு. கேள்விகள் அடுத்தவர்களுடைய அறியாமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவன. அதனாலேயே அனைவராலும் கேள்வி கேட்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். இருப்பினும் யாரேனும் கேட்டுத்தானே ஆக வேண்டும்? (அப்பாடா முதல் கேள்வி கேட்டாகி விட்டது!!!).
இங்கு எனக்குத் தெரியாத , தெரிந்து கொள்ள ஆசை கொண்ட எல்லா வகையான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். பதில் சொல்ல விருப்பமுள்ளவர்கள் மறுமொழி/பின்னூட்டத்தில் தங்கள் பதிலைப் போடவும் அல்லது தங்கள் வலைப்பதிவில் பதிலை எழுதி, சுட்டியை இங்கு இடவும். கேட்க ஆரம்பிக்கட்டுமா?

(இப்போது நான் குழந்தை இல்லைதான். ஆனால் முட்டி போடவைக்கும் ஆசை உள்ளவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் / உருவாகப் போகிறார்கள்)